தலச்சிறப்பு |
தட்சன் யாகத்தில் கலந்துக் கொண்டதால் ஏற்பட்ட பாவத்தைப் பறித்தமையால் இத்தலம் 'திருப்பறியலூர்' என்று அழைக்கப்படுகிறது.
மூலவர் 'வீரட்டேஸ்வரர்', 'தட்சபுரீஸ்வரர்' என்னும் திருநாமங்களுடன், பெரிய லிங்க வடிவில் மேற்கு நோக்கி காட்சி அளிக்கின்றார். அம்பாள் 'இளம்கொம்பனையாள்' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள்.
கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டேஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். பிரகாரத்தில் சித்தி விநாயகர், காசி விஸ்வநாதர், வள்ளி தேவசேனை சமேத சுப்ரமண்யர், வீரபத்திரர், பைரவர், சூரியன் சன்னதிகள் உள்ளன.
அட்ட வீரட்டானத் தலங்களுள் ஒன்று. தட்சன் வேள்வியை அழித்து அவன் தலையை வீரபத்திரர் வடிவில் கொய்த தலம். திருக்கண்டியூர், திருக்கடையூர், திருவதிகை, திருசிறுகுடி, கொருக்கை, வழுவூர், திருக்கோவிலூர் ஆகிய மற்ற வீரட்டத் தலங்கள்.
இக்கோயிலில் உள்ள அகோர வீரபத்திரர் உற்சவமூர்த்தி சிறப்பு. அவர் பாதத்தின் கீழ் தட்சன் யாகமும், அவன் விழுந்து கிடப்பது போன்ற உருவமும் தகட்டால் அமைக்கப்பட்டுள்ளது.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
|